Home Archive by category

ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை முழுமையாக....

2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

 

இந்த சட்ட திருத்தத்தம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளையும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாகவும் அறிவக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த மதிப்பீட்டை சபையில் சமர்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் சில முக்கிய தரவுகள் வருமாறு-

” புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தை நாம் சபையில் சமர்ப்பித்துள்ளோம்.

இன்று நாம் முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடியின் ஆழம் தொடர்பாக நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

எனினும், இதுதொடர்பாக இன்னும் சிலருக்கு தெளிவில்லாமல் உள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு பின்னோக்கி நகர்வதாக பலரும் இன்று கூறுகிறார்கள்.

தூரநோக்கில்லாத பொருளாதாரக் கொள்கையினால் தான் நாடு இன்று பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
மக்கள் அனைத்தையும் அரசாங்த்திடமிருந்தே எதிர்ப்பார்க்கிறார்கள்.

அரசாங்கமானது கொள்கைகளை வகுக்க வேண்டுமே ஒழிய வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என ஜே.வி.பியின் உறுப்பினரான சுனில் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார். இது உண்மையில் வரவேற்றக்கத்தக்கதாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான எமது பேச்சுக்கள் வெற்றியடைந்து இறுதிக்கட்டத்தில் உள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்துள்ளோம். எரிபொருள்- எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க முடிகின்றது.

ஆனால், இவற்றையிட்டு நாம் திருப்தியடைய முடியாது.

எமக்கான நிலையான பொருளாதாரக் கொள்கையொன்று அவசியமாகும். 2023 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டமானது பூகோல பொருளாதாரத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதனை இலக்காகக் கொண்டே இந்த இடைக்கால வரவு- செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் அரச சேவைக்காக இலத்திரனியல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை படிப்படியாக முன்னெடுக்கப்படும்.

தனியார் துறைகளையும் இதனை பின்பற்றுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இவை அரச வங்கிகளில் பெறும் கடன்களைப் பெற்றே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை உள்ளிட்ட 50 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைக்க 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி மற்றும் பணம் அச்சிடுதல் குறித்து புதிய சட்டம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்.

அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.

தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 4 மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும்.

மண்ணெண்ணெய் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மின்சார வசதியில்லாத பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் சமுர்த்தி பயனாளர்கள், முதியோர் கொடுப்பனவைப் பெறுபவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கான கொடுப்பனவை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபாவை வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மலையகத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கு புகையிரதத்தின் ஊடாக மரக்கறிகளை கொண்டு செல்வதற்கான செயற்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை குருநாகலில் நிறுவுவதற்கு முன்மொழியப்படுகிறது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அவற்றின் கிளைகளை திறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்ட ஒழுங்குமுறைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செப்டம்பர் மாதம் முதல் நாட்டின் சுற்றுலாத்துறையை பலப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2023 ஆண்டு இறுதியில் ஒரு வருடத்திற்கு நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சமாக உயர்த்துவதே இதன் இலக்காகும்.

கொரோனா தொற்றினால் தொழிலை இழந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான பயிற்சியை வழங்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்போகத்தின் போது உரத்தின் விலை குறைவடையும். இதன் ஊடாக அரசியை சாதாரண விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

அத்தோடு, நாட்டில் சுமார் 61,000 குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்றி உள்ளன. அவற்றுக்கு சர்வதேச நிதியுதவியுடன் நிவாரணங்கள் வழங்கப்படும்.

எதிர்க்காலத்தில் எரிபொருளை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட உரப்பிரச்சினை மற்றும் கிருமிநாசினி பிரச்சினைக்கு மத்தியில் எக்டயார் 2 அல்லது அதிலும் குறைவாக நெல் பயிர்செய்கை செய்ய அரச வங்கிகளில் விவசாயிகளால் கடன் பெறப்பட்டுள்ளது.

2022 ஆண்டு, மே 30 ஆம் திகதிவரை 28, 259 விவசாயிகள் இவ்வாறு கடன் பெற்றுள்ளனர்.

விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்கவும் நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கிணங்க, விவசாயிகளால் அரச வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ள 680 மில்லியன் ரூபாய் கடன் தொகை வட்டியுடன் சேர்த்து தள்ளுபடி செய்யப்படும்.

தள்ளுபடி செய்யப்பட்ட இந்த தொகையானது, திரைச்சேறியின் ஊடாக இரண்டு வருட தவனைகளுக்கு குறித்த வங்கிகளுக்கு வழங்கப்படும்.

மேலும், இந்த தொகைக்கான வட்டியை குறித்த வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்காக 350 மில்லியன் ரூபாயை நாம் ஒதுக்கியுள்ளோம்.

தேசிய பால் உற்பத்தியை நாம் இன்னமும் பலப்படுத்த வேண்டும். இதற்கான தேசிய வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்படும்.

இதன் ஊடாக முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் சுற்றுலாத்துறையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சிங்கள- தமிழ்- முஸ்லிம்- பறங்கியர் என அனைவரையும் இதில் இணைக்க முடியும் என நாம் நம்புகிறோம்.
பொருளாதாரம் பலமில்லாத ஒரு சமூ

த்தில் இனியும் எம்மால் வாழ முடியாது. இன்னமும் கடன் சுமையுடன் வாழும் சமூகமாகவும் இருக்க முடியாது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

நாம் புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகள் பிடிக்காத காரணத்தினால்தான் சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையவில்லை என்று சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியாக நான், ஒரு தனி மனிதராக கொள்கைகளை வகுக்கவில்லை.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்துதான் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.
எனவே, விரும்பமில்லாத கொள்கைகள் இருப்பின் எம்முடன் இணைந்து அதனை மாற்றியமைக்குமாறு கட்சிகளிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

தனிப்பட்ட அரசியல் கொள்கைகளை விடுத்து நாட்டுக்கான ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும். இதனை தவற விட்டால் நாம் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.

உலகத்துடன் ஒன்றிணைந்து வேகமாக முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்புவோம்- என்றார்.

Related Posts