Home Archive by category

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று;தமிழர் தாயகம்,புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள்

இன்று கடைப்பிடிக்கப்படும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளுக்காக இரண்டு வருடங்களுக்கு பின்னர் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பேரணிகள், ஒன்றுகூடல்கள் பெருமெடுப்பில் நடத்தப்படவுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றுப் பரவலின் வீரியத்தால் போராட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தங்களுடைய போராட்டங்களுக்கு எந்த தரப்புக்களும் உரிய தீர்வுகளை வழங்காத காரணத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களைக் கடந்துள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது 2000 நாட்களை கடக்கின்ற நிலையில் , சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், அனைத்து தமிழ் உறவுகளையும் ஆதரவு வழங்குமாறு போராட்டத்தை நடத்துகின்ற முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாயகத்தில் நீதிகோரி போராடும் அன்னையருக்கு துணையாக போராட்டங்களில் அணிதிரளுமாறு தமிழ் அரசியல்வாதிகளாலும் அமைப்புக்களாலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் தலைநகர் பரிசில், பிரித்தானிய தலைநகர் லண்டனில், ஜேர்மனியின் ஸ்ருக்காற் நகர் உட்பட்ட இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன.அதேபோல கனடாவிலும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts