Home Archive by category

யாழ்.மாநகர சபையுடனான உடன்படிக்கையை ரத்து செய்த ஜப்பான்

யாழ்ப்பாண மாநகர சபையுடன் கழிவகற்றல் தொடர்பில் ஜப்பான் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளது.

இந்த உடன்படிக்கைகமைய செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, செவவழித்த நிதியை திருப்பி தருமாறு ஜப்பானிய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,ஜப்பானிய அரசாங்கம் கழிவகற்றல் மீள்சுழற்சி பாரவூர்திகளுக்கான நிதியை வழங்கியபோதும், அதனை பயன்படுத்த இலங்கையின் நிதியமைச்சு அனுமதிக்கவில்லை என்று யாழ்ப்பாண மாநகரசபை குற்றம் சுமத்தியுள்ளது.

இதனையடுத்து மாநகர சபையின் உறுப்பினர் வரதராசா பார்த்தீபனை தொடர்புகொண்டு வினவியபோது, இது தொடர்பான தகவல்களை அவர் பகிர்ந்துக்கொண்டார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,“கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் இலாப நோக்கற்ற பிரிவான ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் உள்ளூராட்சி மன்றங்களுடன் மறுசுழற்சி செய்யப்பட்ட உபகரண கையகப்படுத்தல் திட்ட உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

இதன்கீழ் பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிக்கு யாழ்ப்பாண மாநகரசபை ஒப்புதல் வழங்கியது.

இதற்கமைய, 2019ஆம் ஆண்டில் இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஜப்பானிய நிதி நேரடியாக யாழ்ப்பாண மாநகர சபையின் வங்கிக்கணக்குக்கு வரவு வைக்கப்பட்டது.

எனினும் மாநகரசபை ஒன்றுக்கு வெளிநாட்டு நிதி நேரடியாக வரமுடியாது என்று கூறி,இலங்கையின் நிதியமைச்சு அந்த நிதியை பயன்படுத்த கடந்த மூன்று வருடங்களாக இழுத்தடிப்பு செய்து வந்தது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளிடமும் யாழ்ப்பாண மாநகரசபை முறையிட்டது. எனினும் அது பயனளிக்கவில்லை.

எனவே ஜப்பானிய அரசாங்கம் கோரியதற்கு இணங்க, அது வழங்கிய நிதியை யாழ்ப்பாண மாநகரசபை திருப்பியனுப்பவுள்ளது.” என கூறியுள்ளார்.

இதேவேளை மூன்று வருடங்களுக்கும் மேலாக இத்திட்டம் தாமதப்படுத்தப்பட்டதையடுத்து திட்டத்துக்காக மறுசீரமைக்கப்பட்ட நான்கு கழிவுகளை சேகரிக்கும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கு செலவழித்த பணத்தை மீள வழங்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நான்கு பாரவூர்திகளை இறக்குமதி செய்ததற்காக செலவிடப்பட்ட 14.3 மில்லியன் (அமெரிக்க டொலர் 83,432) பணத்தை திருப்பித் தருமாறு தூதரகம் யாழ்ப்பாண மாநகரசபைக்கு கடிதம் எழுதியுள்ளது.

அத்துடன் இந்த திட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய துாதரகம் யாழ்ப்பாண மாநகர முதல்வருக்கு அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதில்லை என்று கடந்த ஏப்ரலில் அறிவித்ததை அடுத்தே யாழ்ப்பாண மாநகர சபைக்கான திட்டமும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. 

Related Posts