Home Archive by category

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் உத்தரவையடுத்து திருமலையில் விகாரை நிர்மாணப் பணிகள் நிறுத்தம் : எதிர்த்து பிக்குகள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் உத்தரவையடுத்து நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) காலை 9 மணி தொடக்கம் 10.30 மணி வரை போராட்டம் நடத்தப்பட்டது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் இடப் பக்கத்தில் உள்ள பெரியகுளம் சந்தியை அண்மித்துள்ள, தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியலுக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு அருகில், பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விகாரை நிர்மாணிப்பினால் இனமுறுகல்கள் ஏற்படும் என்ற நோகத்தினாலும், மக்களின் எதிர்ப்பின் காரணமாகவும் நிர்மாணப் அப்பணிகளை நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால்  அறிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'சிங்கள, தமிழ், முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம்', 'வரலாற்று சான்றுகளை கிளறுகின்ற R.சம்பந்தன்', 'புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்?' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சினை தொடர்பாக பெளத்த பிக்குகள் தெரிவிக்கையில், 

நாங்கள் தொல்லியல் காணிக்குள் விகாரை அமைக்கவில்லை. அதற்கு அண்மையில் உள்ள புத்தசாசன அமைச்சினால் பௌத்த விகாரைக்காக வழங்கியுள்ள காணியில்தான் பௌத்த விகாரை அமைக்கப் போகின்றோம். இதனால் எவருக்கும் பிரச்சினை இருக்காது என்கின்றனர். 

இந்நிலையில், அப்பகுதி மக்களோ, 

பௌத்தர்களே இல்லாத இடத்தில் யாருக்காக இந்த பௌத்த விகாரை? காலம் காலமாக இப்பகுதியிலும் இப்பகுதியைச் சுற்றிய பகுதியிலும் தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றார்கள். எனவே, இதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது. 

விகாரை அமைக்க அனுமதி வழங்கினால், அது மூவின மக்களினதும் ஒற்றுமையை சீர்குலைத்து, இன வன்முறைக்கும் வித்திடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுமட்டுமல்லாமல், இலங்கையானது உலகளவில் இன நல்லிணக்கத்துக்கான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அச்செயற்பாட்டிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். 

அத்தோடு, இது தொடர்பாக கருத்து தெரிவித்த அப்பகுதிவாசியுடன் பிக்கு ஒருவர் கருத்து மோதலில் ஈடுபட்டு எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையிலேயே இனமுறுகல் ஏற்படும் நிலையை கருத்திற்கொண்டே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விகாரை நிர்மாணிப்பை தடுத்து நிறுத்தி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts