Home Archive by category

நியூஸிலாந்துடனான 3 ஆவது இருபது20 போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

நியூஸிலாந்து மகளிர் அணியுடனான 3 ஆவது இருபது20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு பி.சரவணமுத்து அரங்கில் இன்று புதன்கிழமை இப்போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் களத்தடுப்பு செய்ய தீர்மானித்தது.

அதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி சோபி டிவைன் 25 பந்துகளில 46 ஓட்டங்களைக் குவித்தார். சுசி பேட்ஸ் 38 பந்துகளில் 37 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் இனோகா ரணவீர 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், சுகந்திகா குமாரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 14.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143  ஓட்டங்களைக் குவித்தது,

அணித்தலைவி சமரி அத்தபத்து  47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 80 ஓட்டங்களைக் குவித்தார். ஹர்சிதா சமரவிக்கிரம 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைக் குவித்தார்.  

இத்தொடரின் முதல் இரு போட்டிகளில் நியூஸிலாந்து அணி வென்றது. இதனால் இத்தொடரின் வெற்றியை அவ்வணி 2:1 விகிதத்தில் தனதாக்கியது.

3 ஆவது போட்டியின் சிறப்பாட்டக்காரரராக சமரி அத்தபத்து தெரிவானார். இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக சுசி பேட்ஸ் தெரிவானார்.  

Related Posts