Home Archive by category

பிரான்ஸில் பட்டாசு வாங்க, வைத்திருக்க மற்றும் விற்பனை செய்வதற்கு தடை

பிரான்ஸில் பட்டாசு விற்பனை, வைத்திருப்பது மற்றும் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

வார இறுதி மற்றும் அடுத்த வாரத்தில் மீண்டும் வன்முறைப் போராட்டங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸின் தேசிய தினம் இம்மாதம் 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் வகையில் இம்மாதம் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17 வயதான நஹெல் எம் என்ற இளைஞர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தலைநகர் பாரிசில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உள்ளூர் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படும் அதிகாரப்பூர்வ வானவேடிக்கை நிகழ்வுகளுக்கு தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொது ஒழுங்குக்கு கடுமையான இடையூறு ஏற்படும் அபாயத்தைத் தடுக்க, ஜூலை 15 வரை பட்டாசுகளை விற்பனை செய்வது, வைத்திருப்பது, கொண்டு செல்வது மற்றும் பயன்படுத்துவது தடைசெய்யப்படும்" என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாரிசில் வன்முறை ஏற்பட்ட காலப்பகுதியில் பட்டாசு ஒரு பிரபலமான ஆயுதமாக இருந்தது. சுமார் 20 ஆண்டுகளாக பிரான்சின் மிக மோசமான நகர்ப்புற வன்முறையாக இது மாறியிருந்தது.

மேலும் சாதாரண காலங்களில் கூட, தேசிய தினத்தின் பொது சதுக்கங்கள் மற்றும் தெருக்களில் பட்டாசுகளை வீசுவதன் மூலம் முந்தைய ஆண்டுகளில் அடிக்கடி இடையூறு விளைவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் எலிசபெத் போர்ன், வானவேடிக்கை மீதான கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக, அமைதியைக் காப்பதற்கும், "இந்த இரண்டு முக்கிய நாட்களில் பொது மக்களை பாதுகாப்பதற்கும்" பாதுகாப்புப் பிரசன்னம் நிலைநிறுத்தப்படும் என்று கூறினார்.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, குறைந்தபட்சம் 1,160 சிறுவர்கள் உட்பட, 3,700 க்கும் மேற்பட்டோர் சமீபத்திய போராட்டங்கள் தொடர்பாக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய தினம் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

Related Posts