Home Archive by category

அயர்லாந்தை வெற்றிகொண்டு சுப்பர் 6 சுற்றுக்கு செல்லுமா இலங்கை ?

ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படும் இலங்கை, தனது மூன்றாவது போட்டியில் அயர்லாந்தை  ஞாயிற்றுக்கிழமை (25)   எதிர்த்தாடவுள்ளது.

பி குழுவுக்கான இந்தப் போட்டி புலாவாயோ, குவீன் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் மிகமோசமாக விளையாடி வரும் அயர்லாந்திடம் பெரிய அளவில் சவாலை இலங்கை எதிர்கொள்ளாது எனவும் அதன் வெற்றி அலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்தை எதிர்கொண்ட 4 சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிபெற்றுள்ளது. இரண்டு அணிகளும் முதல் தடவையாக 2007 உலகக் கிண்ண சுப்பர் 8 கிரிக்கெட் போட்டியில் சந்தித்தபோது இலங்கை 8 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

கடைசியாக இந்த இரண்டு அணிகளும் டப்ளினில் 2016இல் சந்தித்தபோது  இலங்கை 136 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. அப் போட்டியில் விளையாடிய தசுன் ஷானக்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரே தற்போதைய அணியில் இடம்பெறுகின்றனர்.

இதேவேளை, ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் தகுதிகாண் சுற்றில் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் ஓமானையும் இலங்கை மிக இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.

மறுபுறத்தில் ஓமானிடமும் ஸ்கொட்லாந்திடமும் அயர்லாந்து தோல்விகளைத் தழுவியது.

இந்தப் போட்டிகளின் முடிவுகளின் பிரகாரம் இலங்கைக்கு மற்றொரு இலகுவான வெற்றிகிட்டும் என்றே கூறத் தோன்றுகிறது.

தனது முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்தத் தீர்மானம் மிக்க போட்டியிலும் இலங்கை விளையாடும் என நம்பப்படுகிறது.

பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ்01, சதீர சமரவீர, சரித் அசலன்க ஆகிய அனைவரும் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பிரகாசித்துவந்துள்ளதுடன்  சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க, வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார ஆகியோர் திறமையாக பந்துவீசி எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்துள்ளனர்.

வனிந்து ஹசரங்க உலகக் கிண்ண தகுதிகாணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்ததுடன் மொத்தமாக 11 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் .

அதேவேளை முதலிரண்டு போட்டிகளிலும் எவ்வாறு சிறந்த வியூகங்களை அமைத்து இலங்கை விளையாடியதோ அதனை இந்தப் போட்டியிலும் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை பின்பற்றும் என நம்பப்படுகிறது.

அயர்லாந்துடனான போட்டியில் பெரும்பாலும் துஷ்மன்த சமீர விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விளையாடினால் கசுன் ராஜித்த அவருக்கு வழிவிடுவார்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, கசுன் ராஜித்த அல்லது துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார.

அயர்லாந்து: அண்டி மெக்ப்றைன், போல் ஸ்டேர்லிங், அண்டி பெல்பெர்னி (தலைவர்), ஹெரி டெக்டர், லோக்கன் டக்கர், ஜோர்ஜ் டொக்ரெல், கெரத் டிலேனி, மார்க் அடயார், க்றஹாம் ஹியூம், ஜொஷ் லிட்ல், பென் வைட்.

Related Posts