Home Archive by category

உள்ளூர் வீரர்களில் நம்பிக்கைவைத்த எல்பிஎல் அணி முகாமைத்துவங்கள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களைவிட உள்ளூர் வீரர்களில் அணி முகாமைத்துவங்கள் நம்பிக்கை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த ஏலத்தில் இலங்கையின் அதிவேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்கவை அதிகூடிய 92,000 டொலர்களுக்கு லைக்கா'ஸ் ஜெவ்னா கிங்ஸ் முகாமைத்துவத்தினர் தமதாக்கிக்கொண்டனர்.

இரண்டாவது அதிகூடிய விலைக்கு சரித் அசலன்கவையும்  (80,000 டொலர்கள்) லைக்கா'ஸ் ஜெவ்னா கிங்ஸ் அணி முகாமைத்துவத்தினால் வாங்கப்பட்டார்.

இலங்கையின் அதிசிறந்த சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகிய இருவரையும் மூன்றாவது அதிக விலையான தலா 76,000 டொலர்களுக்கு தம்புள ஓரா அணி முகாமைத்துவத்தினர் ஏலத்தில் வாங்கினர்.

வெளிநாட்டு வீரர்களில் அதிகூடிய விலைக்கு வாங்க்ப்பட்டவர் நியூஸிலாந்தின் சாத் போவ்ஸ் ஆவார். அவரை 58,000 டொலர்களுக்கு கோல் டைட்டன்ஸ் வாங்கியது.

 

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷொயெப் மாலிக், ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சாளர் நூர் அஹ்மத் ஆகிய இருவரும் அதிகபட்ச விலையான 50,000 டொலர்கள் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டனர். 

 

அத்துடன் பாகிஸ்தானின் இப்திகார் அஹ்மதை 50,000 டொலர்களுக்கும் வஹாப் ரியாஸை 40,000 டொலர்களுக்கும் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் வாங்கியது.

நான்காவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலம் ஷங்ரி லா ஹோட்டலில் புதன்கிழமை (15) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10,00 மணியளவில் நிறைவுபெற்றது.

இந்தியாவின் ஏல அதிகாரியான சாரு ஷர்மா ஏலத்தை நெறியாள்கை செய்தார்.

நடப்பு சம்பியன் லைக்காஸ் ஜெவ்னா கிங்ஸ், தம்புள ஓரா, கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், பிலவ் கண்டி, கோல் டைட்டன்ஸ் ஆகிய ஐந்து அணிகளின் முகாமைத்துவத்தினர் 360 வீரர்களில் 100க்கும் மேற்பட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

எல்பிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வீரர்களுக்கான ஏலம் நடத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த எல்பிஎல் வீரர்கள் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை விட இலங்கை வீரர்களே அதிகூடிய விலைகளுக்கு வாங்கப்பட்டனர். இதிலிருந்து வெளிநாட்டு வீரர்களைவிட உள்ளூர் வீரர்களில் எல்பிஎல் அணிகளின் முகாமைத்துவத்தினர் நம்பிக்கை கொண்டிருப்பது தெளிவானது.

இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்கவை 92,000 டொலர்களுக்கும் சகலதுறை வீரர் சரித் அசலன்கவை 80,000 அமெரிக்க டொலர்களுக்கும் லைக்கா'ஸ் ஜெவ்னா கிங்ஸ் அணி முகாமைத்துவத்தினர் வாங்கினர். அவர்கள் இருவரே அதிகூடிய முதல் இரண்டு விலைகளுக்கு வாங்கப்பட்ட வீரர்களாவர்.

இந்த ஏலத்தில் முதலாவது வீரராக இலங்கையின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா வாங்கப்பட்டார். 40,000 டொலர்கள் அடிப்படை விலையுடன் அவருக்கான ஏலம் ஆரம்பிக்கப்பட்டது. இறுதியில் அவரை 76,000 டொலர்களுக்கு தம்புள ஓரா ஏலத்தில் எடுத்தது. அத்துடன் வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோவையும் அதே விலைக்கு தம்புள ஓரா வாங்கியது.

இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலை 72,000 டொலர்களுக்கும் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீரவை 70,000 டொலர்களுக்கும் பிலவ் கண்டி அணி முகாமைத்துவத்தினர் ஏலத்தில் வாங்கினர்.

விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம மீது பெரும் நம்பிக்கை வைத்த தம்புள ஓரா முகாமைத்துவத்தினர் அவரை 68,000 டொலர்களுக்கு எடுத்தனர்.

இதேவேளை,  இளம் வீரர் துனித் வெல்லாலகேயை 56,000 டொலர்களுக்கு வாங்கிய லைக்காஸ் ஜெவ்னா கிங்ஸ் தமது வழமையான வீரர்களான ஷொயெப் மாலிக்கை 50,000 டொலர்கள் அடிப்படை விலைக்கும் யாழ். நட்சத்திரம் விஜயகாந்த் வியாஸ்காந்தை 18,000 டொலர்களுக்கும் எடுத்தது.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் ஆகிய இருவரையும் 40,000 டொலர்களுக்கு கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் வாங்கியது.

ஏலத்தில் வாங்கப்படட ஏனைய வீரர்கள் (40,000 டொலர்கள்)

இசுறு உதான (40,000 டொலர்கள் அடிப்படை விலை) - பிலவ் கண்டி, நிரோஷன் திக்வெல்ல (44,000 டொலர்கள்) - கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், குசல் ஜனித் பெரேரா (40,000 டொலர்கள் அடிப்படை விலை) - தம்புள ஓரா, வஹாப் ரியாஸ் (40,000 டொலர்கள் அடிப்படை விலை) -கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், லஹிரு குமார (40,000 டொலர்கள் அடிப்படை விலை) - கோல் டைட்டன்ஸ்.

அவுஸ்திரேலிய வீரர்களான கிறிஸ் லின், பென் மெக்டேர்மட், ஜேசன் பெரெண்டோர்வ், மிச்செல் ஸ்வெப்சன், பங்களாதேஷ் வீரர்களான தமிம் இக்பால், முஷ்பிக்குர் ரஹிம்,  மேற்கிந்திய தீவுகளின் கார்லோஸ் ப்றத்வெய்ட், ஸிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா, பாகிஸ்தானின் இமாத் வசிம் மற்றும் அஸாம் கான், ஆப்கானிஸ்தானின் பஸால்ஹக் பாறூக்கி,  தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் இம்ரான் தஹிர் ஆகியோரது அடிப்படை விலையாக 50,000 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எந்த அணியும் அந்த விலையில்  அவர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

 

 

Related Posts