Home Archive by category

சாதியை கேட்டது உண்மை! தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் கூறுவது அரசியல் நோக்கமே

இரண்டு நண்பர்கள் தனிப்பட்ட ரீதியில் உரையாடிய விடயத்தை பல வருடங்கள் கழித்து பொது வெளியில் கூறுவது அரசியல் நோக்கமாகவே பார்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சாதிய ரீதியில் உரையாடியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட விடயம் தொடர்பில்  கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐங்கரநேசன் எனது நண்பன். எனக்கும் அவருக்கும் ஒரு பிரச்சினையும் கிடையாது. தாவரவியல் , சூழல் தொடர்பாக தெளிவு வேண்டுமாயின்  இப்பொழுதும் தொலைபேசியில் அழைத்து அவற்றினை அறிந்து கொள்வேன்.

ஆனால் ஏதோ காரணத்திற்காக அவர் ஒரு கூட்டத்தின் பொழுது, நான் அவரிடம் தனது சாதியை கேட்டதாக மின்னஞ்சல் அனுப்பியதாக கூறி நான் சாதியத்தினை பார்ப்பவன் என்ற முறையிலே  சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அவருக்கு மின்னஞ்சல் போட்டது உண்மை. இங்கு வாழும் மக்கள் அனைவரும் பிறந்து வளரும் போதே தம்மை சுற்றியிருப்பவர்களை பற்றிய சாதியை அறிந்திருப்பார்கள். நான் கொழும்பிலே பிறந்து வளர்ந்தேன். அதனால் எனக்கு சாதியை பற்றிய அறிவில்லை.

ஆனால் இங்கு முதலமைச்சராக வந்த பிற்பாடு, எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அனைவரும் நான் எனது சாதி மக்களையும் பார்க்க மற்றைய சாதிகளில் இருப்பவர்களை அதிகம் நம்புவதாகவும், எனது சாதியில் உள்ளவர்களை அவ்வளவு நம்புவதில்லை என்று கூறினார்கள்.

அவ்வாறான நிலையில் தான் என்னை சுற்றியுள்ளவர்களை பார்த்தால்  சிவாஜிலிங்கம், அருந்தவபாலன், ஐங்கரநேசன் என்று பலர் தோழமையுடன் இருந்தார்கள். ஒரு சிலரின் சாதி விபரங்கள் எனக்கு தெரிந்தது. இன்று வரை ஐங்கரநேசனின் சாதி என்னவென்று தெரியாது.

ஆகவே, நண்பர் என்ற ரீதியில் நான் இப்படியான சூழலிலே உங்களிடம் கேட்பதாகவும், உங்களுடைய சாதி என்னவென்றும் மின்னஞ்சல் மூலம் கேள்வியினை கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறவில்லை. அவருக்கு விருப்பமில்லை என்பதால் கூறவில்லை என்று விட்டு விட்டேன்.

ஆயினும் 4,5 வருடங்களின் பின்னர் எந்த கதையினை கதைப்பது என்றால் அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாகவே நம்புகின்றேன். அவர் தமிழரசு கட்சியிலே சேருவதற்கு விருப்புடன் உள்ளார் என்றும், ஐங்கரநேசனை விக்கினேஸ்வரனின் நண்பன் என்று அடையாள காட்டியிருந்தார்கள்  என்றும் இந்த அடையாளத்தினை உடைக்கவே இவ்வாறான பேச்சில் இவ்வாறு இயங்கினார் என்றும் கூறப்பட்டது.

அதுமட்டுமன்றி அந்த மின்னஞ்சலில் நீங்கள் எந்த சாதியாக இருப்பினும் உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் குறையாது என்றும் கூறியிருக்க அத்தனையும் அவர் ஏற்றுக்கொண்டார். அப்படி நான் இருக்கையில் சாதியடிப்படையில்  நான் இயங்குவதாக கூறுவது வியப்பிற்குரியது.

அதுமட்டுமன்றி இரண்டு நண்பர்களிற்கிடையில் நடந்த உரையாடலை அனைவருக்கும் முன்னால் தற்பொழுது கூறியிருப்பது என்பது அரசியல் நோக்கமாகவே அமையும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Related Posts