Home Archive by category

கொன்றவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் ஒரே இடத்தில் அஞ்சலிப்பதா?

கொன்றவர்களுக்கும் கொன்று குவிக்கப்பட்டவர்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி செய்வது என்பது மக்களை தவறாக வழி நடத்துகின்ற அர்த்தமானதன்று என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பொது நினைவு தூபி அமைப்பது குறித்த முடிவு குறித்து சி . வி. கே. சிவஞானம் சமூகம் ஊடகத்துக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரவையின் இந்த  தீர்மானமே ஒரு தெளிவில்லாத தீர்மானம். யுத்தத்தில் உயிரிழந்த  இராணுவத்தினர் , போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் ஒரே கூடைக்குள் போட்டு நினைவிடம் எங்கே அமைப்பது? மக்களையும் போராளிகளையும் இலங்கை ராணுவத்தினர் கொலை செய்தனர். கொலை செய்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் ஒரே இடத்தில்
அஞ்சலிப்பது என்பது மக்களை தவறாக வழி நடத்துகின்ற அர்த்தம் இல்லாத செயல்பாடே தவிர யதார்த்தமானது அல்ல.

அஞ்சலி செலுத்தும் போது மக்கள் தமது மதம் சார்ந்தே அஞ்சலி  செலுத்துவார்கள். ஆனால் மத நல்லிணக்கம் என்ற பெயரில் பொது தூபி அமைத்து  அந்த இடத்தில எந்த மதம் சார்ந்து அஞ்சலி செலுத்துவது என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். இந்த முடிவை சரத் வீரசேகர எதிர்த்துள்ள நிலையில் சிங்கள இனமும் ஏற்றுகொள்ளவில்லை  என்பதே நிதர்சனம் எனவும் தெரிவித்ததுள்ளார்.

ஒற்றுமைக்கும் இனநல்லிணக்கத்திற்கும் பல விடயங்கள் உண்டு என்று தெரிவித்த அவர், தமிழன் என்று தம்மை அடையாளபடுத்தி கொண்டு செய்கின்ற குரோத நடவடிக்கைகளை நிறுத்துவது தான் இனநல்லிணக்கம் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் மத நல்லிணக்கத்தை உருவாக்காது  என்றும் தமிழர்களுடைய உரிமைகளை பறிக்காமல் உரிமைகளை கொடுத்து நல்லிணக்கம் செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வெற்றி விழாவாக கொண்டாடுபவர்களும் அந்த துக்கத்தை அனுபவிக்கும் நாங்களும் ஒரே இடத்தில சங்கமிப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும் சிவிகே. சிவஞானம் தெரிவித்துள்ளார்

Related Posts