Home Archive by category

குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு அனுஷ்டிப்பு

குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டுள்ளது.

இதேவேளை, காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி திருப்பலியும், சம நேரத்தில் மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திரர் பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டி சிறப்பு பூஜையும் இடம் பெற்றது.

சிறிலங்கா கடற்படையினர், 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை நடுக்கடலில் வழிமறித்து அதில் பயணித்த குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை ஈவிரக்கமின்றி வெட்டிப் படுகொலை செய்திருந்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கே நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 9.00 மணிக்கு குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுமத்தின் நெடுந்தீவு பிரதேச தலைவர் வி.ருத்திரன் தலைமையில் சுடரேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுடன் பசுந்தீவு ருத்திரனின் குருதியின் குமுறல்கள் என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வும் இடம்பெற்றது.  இந்நிகழ்வுகளில் நெடுந்தீவு பகுதி மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இப்படுகொலை இடம்பெற்ற போது,  இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி, குறித்த படுகொலையில் சிறிலங்கா கடற்படையின் தலையீடு ஒள்ளது என்பதை மறுத்திருந்தார்.

படுகொலை நடந்து 38 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை யாரும் குற்றவாளிகளாக பொறுப்பேற்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts