Home Archive by category

காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் உயிருக்கு ஆபத்து

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதி நடத்திய தாக்குதலானது போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய அனைவரையும் இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்களின் ஆரம்பம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் அனுசரணையுடன், காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மொட்டு கட்சியின் திட்டமிடல் எனவும் தெரிவித்துள்ளார்.

பியத் நிகேஷல மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல், இந்த முழுப் போராட்டத்திற்கும் நடத்தப்படும் தாக்குதல்களின் முதல் அடியே என தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி மொட்டு கட்சி உறுப்பினரும், கடுவெல முன்னாள் பிரதி மேயருமான சந்திக அபேரத்ன பியத் நிகேஷல மீது நடத்திய மிலேச்சத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாச, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கும்பல் தாக்குதலுக்கும், கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அமைதிப் போராளிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகப் செயற்படுமாறு சபாநாயகர் மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நபர்களின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts