Home Archive by category

சீனாவுக்கு செல்லும் இலங்கைக் குரங்குகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலை தடுக்கும் வகையில் சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் அமைச்சரவை குழு உறுப்பினர்கள் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை இம்மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது.

இலங்கை வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன, ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பங்குதாரர்கள் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, பிரதிவாதிகள் ஒரு இலட்சம் குரங்குளை இந்த நாட்டிலிருந்து சீன நிறுவனமொன்றுக்கு பரிசோதணைக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனவே எந்த நேரத்திலும் இலங்கை குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதியாகும் அபாயம் உள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்த முடிவு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதகத்தை ஏற்படுத்துவதாகவும், விலங்குகளுக்கு அதிகளவில் கொடுமைகள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் சட்டத்தரணி, இந்த நடவடிக்கை மிருகவதை சட்டம் மற்றும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

எனவே குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் உத்தரவை உடனடியாக பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உரிய உத்தரவை பிறப்பித்தார்.

ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

மேலும், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க ஆணை பிறப்பிக்கவும், வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் வழங்குவதைத் தடுக்க வனவிலங்கு இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Related Posts