Home Archive by category

பௌத்த சின்னங்கள் மீதே சிவலிங்கங்கள் பிரதிஷ்டை : பொறுமைக்கும் எல்லையுண்டு என்கிறார் சரத் வீரசேகர

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம், விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன எனவும் சிங்களவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு, பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில் சரத் வீரசேகர மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதற்கு வரலாற்று ரீதியில் பல சான்றுகள் உள்ளன. பௌத்த தொல்பொருள் சின்னங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. ஆகவே பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கையில் வாழும் அனைவருக்கும் உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் பௌத்த மதத்துக்கும், பௌத்த புராதன தனித்துவத்துக்கும் எதிராக திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். பௌத்த மதத்தை அழிக்கிறார்கள். சிங்களவர்கள் பிற மதங்களை அழிக்கவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்களை  பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் திட்டமிட்டு அழிக்கிறார்கள். 

பௌத்த மத வழிபாடுகளுக்கு பல்வேறு வழிகளில் தடையேற்படுத்துகிறார்கள். வெடுக்குநாறி பகுதியில் பௌத்த புராதான சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் உட்பட விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் கொழும்பில்  இந்துக்கள் மத வழிபாடுகளில்  ஈடுபட்டார்கள், தேர் இழுத்தார்கள், சிங்கள பௌத்தர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆகவே சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது.

தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என்பதை ஜனாதிபதி ஆராய வேண்டும். இல்லாத பிரச்சினைகளை தோற்றுவித்து அதனை இனப்பிரச்சினை என தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஆகவே பௌத்த மத மரபுரிமைகளை பாதுகாக்க ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts